மண்ணை கொண்டு வந்து கொட்டியதால் மண்ணடி

இப்போது நேப்பியர் பாலம் இருக்கிற இடத்துக்கு அருகே நரிமேடு என்று ஒரு குன்று இருந்தது. ஜோக் ஹில் என்று ஆங்கிலத்தில் பெயர்.

அந்தக் குன்றில் இருந்து பீரங்கி கொண்டு கோட்டையைக் குறி வைத்தால் கோட்டையைத் தரை மட்டம் ஆக்கிவிட முடியும்.
கோட்டைக்கு அருகில் அப்படியொரு மேட்டுப் பகுதி இருக்கக்கூடாது என்று வெள்ளையர் நினைத்தனர். அந்தக் குன்றை மெல்ல, மெல்ல அகற்றி அந்த மண்ணை செகண்ட் லைன் பீச்சுக்கு அருகே கொட்டி அங்கு பள்ளமாக இருந்த பகுதியை மேடாக்கினர். அங்கிருக்கிற மல்லீஸ்வரர் கோவிலைப் பார்த்தால் கோவிலிலிருந்து அந்தப் பகுதி சுமார் பத்தடி உயர்ந்திருப்பது தெரியும்.
அந்தக் குன்றின் மண்ணை மாட்டு வண்டிகளில் இங்கு கொண்டு வந்து அடித்ததால்தான் இந்தப் பகுதி மண்ணடி எனப்படுகிறது.

சென்னையின் சில பகுதிகளுக்குப் பெயர்கள் எப்படி தோன்றின என்பது சுவையான ஆராய்ச்சி. அப்போது திருவல்லிக்கேணி, திருவொற்றியூர் என்ற கிராமங்கள் பழமையானவை. கிராமங்கள் இடைப்பட்ட பகுதிகளால் இணைக்கப்பட்ட போது நகரமாகியது. அப்போது நகரத்துக்குள் நுழையும் இடங்களான கொத்தவால் சாவடி, வால்டாக்ஸ், சால்ட் குவாட்டர்ஸ், தண்டையார்பேட்டை டோல்கேட் போன்றவை நகரத்தின் வரி வசூலிப்பு எல்லைகளாக இருந்தன. கொத்தவால் என்பது வரி வசூலிப்பவனின் ஒரு பதவிதான். அதே போல பெத்தநாயக்கன், தலையாரி, கணக்குப் பிள்ளை, முன்சீப், பணிச்சவன் என்று பல்வேறு பதவிகள் உண்டு.

தங்கசாலை என்று அழைக்கப்படுகிற தெரு வண்ணாரத் தெருவாக இருந்தது. இத் தெருவில் லிங்கிச் செட்டி என்பவர்தான் வெள்ளிக்காசு அச்சடிக்கற கான்ட்ராக்ட் எடுத்து நடத்தினார். அதன் பிறகுதான் இது தங்கசாலை ஆனது. இங்கிருந்த வண்ணார்கள் வேறு இடத்துக்குக் குடி வைக்கப்பட்டனர். அந்தப் பகுதி பின்னர் வண்ணாரப் பேட்டை என்று மாறியது.
பல இடங்களின் பெயர்கள் காலப்போக்கில் எப்படியெல்லாம் மாறின என்பது வியப்பானது. செட்டிப் பேட்டை என்பது சேத்துபட்டு என்று ஆனது. நகர எல்லையான சுங்கச்சாவடியில் தண்டோரா போடுவதால் அந்தப் பகுதி தண்டாரப் பேட்டை என்று ஆனது.
சிறிய அளவில் தறி வைத்துத் தொழில் செய்த பகுதியை சின்ன தறி பேட்டை என்றனர். அது இப்போது சிந்தாதிரி பேட்டை என்று அழைக்கப்பட்டு வருகிறது. இப்படி நிறைய ஊர்ப் பெயர்கள் அர்த்தம் இழந்து இப்போது மாறிப்போய் இருப்பதைப் பார்க்கிறேன்.
எங்கள் பகுதியில் முதன் முதலில் உருவான தியேட்டர் கினிமா சென்ட்ரல். அதில்தான் தியாகராஜ பாகவதரின் படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆகும். பின்னர் அது முருகன் டாக்கீஸ் ஆனது. இப்போதும் இயங்கிவரும் பழைய திரையரங்கங்களில் ஒன்று. எனக்கு நினைவு தெரிந்து இப்போது சென்னையில் செயல்பட்டு வரும் பழைய திரையரங்கம் கெயிட்டி.
மண்ணடி பகுதியில் ரத்தினவேலு செட்டியார் நடத்திய ரிப்பன் பிரஸ் மிகவும் பிரபலம். நிறைய தமிழ் நூல்கள் அங்கு அச்சாகின.
இப்போது பெரியார் திடல்- தினத்தந்தி இருக்கும் இடத்தில் ட்ராம் ஷெட் இருந்தது. அங்கிருந்து ராயபுரம், சிந்தாதிரிப் பேட்டை, மயிலாப்பூர், புரசை வாக்கம் பகுதிகளுக்கு ட்ராம் இயங்கின. சுலபமாக அடையாளம் தெரிய சிவப்பு, திருவொற்றியூருக்கு.. பச்சை, மயிலாப்பூருக்கு என்று வண்ணம் பிரித்திருப்பார்கள்.
எனக்குத் தெரிந்து நேப்பியர் பாலம், அடையாறு வழியாக திருப்போரூருக்கு ஒரு பாதை இருந்தது ஞாபகம் இருக்கிறது.
நகரமான சென்னையில் குடியிருக்க வரி வசூலிக்கலாம் என்ற யோசனையைத் தந்தவர் பேப்பமன்ஸ் பிராட்வே என்பவர். நகரத்தில் இருக்க வேண்டுமானால் வரி செலுத்த வேண்டும் என்றதும் பாதி பேர் நகரத்தைவிட்டுச் சென்றுவிடத் தீர்மானித்தனர். பிறகு வரி வசூலிக்கிற திட்டம் கைவிடப்பட்டது. இன்று பிராட்வே என்று அவர் பெயரால் அழைக்கப்படும் சாலை இருந்த இடத்தில் நீளமான ஒரு சிற்றோடை இருந்தது. அந்த ஓடையை மூடி அதன் மீது சாலை அமைத்து அதற்குத்தான் அவருடைய பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
என்னுடைய சிறுவயதில் மாட்டு வண்டி, குதிரை வண்டி, ரேக்ளா வண்டி போன்றவைதான் நகரத்தின் முக்கிய வாகனங்களாக இருந்தன.
ஸ்ரீ ஹரிகோட்டா என்ற இடத்தில் ஆயிரம் சிவலிங்கம் இருந்தன. முக்கியமான சிவஸ்தலமாக இருந்தது. இப்போது ராக்கெட் ஏவுதளமாக இருக்கிறது.
என்னுடைய முக்கிய ஞாபகத் தடயமாக நான் கருதுவது, ஜப்பான்காரன் கப்பலில் வந்து குண்டு போட்டபோது மக்கள் எல்லாம் சென்னையில் இருந்து வேறு ஊர்களுக்குப் பயணப்பட்டதைச் சொல்லலாம். எல்லோரும் பித்தளைப் பாத்திரங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு வேறு வேறு ஊர்களுக்குக் கிளம்பினர். ஒரு சில குடும்பங்கள் மட்டும் நடப்பது நடக்கட்டும் என்று இங்கேயே இருந்தனர்.
எங்கள் குடும்பத்தில் பெண்களை எல்லாம் வேறு ஊர்களில் இருக்கச் செய்துவிட்டு ஆண்கள் மட்டும் வீட்டுக் காவலுக்காக இருந்தோம். பயமாகத்தான் இருக்கும். எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் கடற்கரையில் குண்டு விழுந்து மணல் தெறித்து அங்கிருந்த வங்கியின் சுவற்றில் மண் அப்பியிருந்ததைப் பார்த்தேன். கட்டடம் சேதாரம் ஆகவில்லை என்றாலும் அதில் பதிந்திருந்த மண் பயத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. மக்கள் எல்லோரும் கூடிகூட பார்த்தனர்.
இன்று விதம் விதமான மால்களும், மல்டிபில் காம்ப்ளக்ஸ்களுமாக சென்னை நகரம் பெருநகரமாகத் தன்னை உருமாற்றிக் கொண்டுவிட்டது. இந்த நூற்றாண்டில் சென்னையின் மாற்றம் மாயாஜாலம் போல நிகழ்ந்த அதிரடி மாற்றமாகத்தான் இருக்கிறது. மா.சு.சம்பந்தன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: